நவராத்திரி பாடல்கள்

திருப்பிரமபுரம் பண் : நட்டபாடை முதல் திருமுறை

தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.

திருவதிகை வீரட்டானம் பண் : கொல்லி நான்காம் திருமுறை

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 1

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

திருவெண்ணெய்நல்லூர் பண் : இந்தளம் ஏழாம் திருமுறை

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே

காரூர்புன லெய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்என லாமே

திருவேணுபுரம் பண் : நட்டபாடை முதல் திருமுறை


வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்டான்மிக வானான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.

வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்றன பாடல்
ஏதத்தினை யில்லாவிவை பத்தும்மிசை வல்லார்
கேதத்தினை யில்லார்சிவ கெதியைப்பெறு வாரே.
தேவி: திருநிலைநாயகி (திரிபுரசுந்தரி) உடனுறைசுவாமி பிரமபுரிசுவரர் (தோனியப்பர்)

திருவண்ணாமலை பண் : நட்டபாடை முதல் திருமுறை

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
தேவி: உண்ணாமுலையம்மை உடனுறைசுவாமி அண்ணாமலையார் அருணாசலேசுவரர்

திருவிடைமருதூர் பண் : வியாழக்குறிஞ்சி முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
தேவி: நன்முலைநாயகி சுவாமி மகாலிங்கேசுவரர் மருதவாணர்

திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் : பியந்தைக்காந்தாரம் இரண்டாம் திருமுறை

சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே. 3

கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யு மிகவே. 11
தேவி: அழகாம்பிகை சுவாமி சித்தநாதேசுவரர்

திருவிற்குடி வீரட்டம் பண்: நட்டராகம் இரண்டாம் திருமுறை

வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே. 1

விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை
யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே. 11
தேவி: ஏலவார்குழலி சுவாமி வீரட்டநாதர்

திருச்சோற்றுத்துறை பண்: திருவிருத்தம் நான்காம் திருமுறை

காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
தேவி: சுவாமி

கோயில் பண்: திருவிருத்தம் நான்காம் திருமுறை

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.

சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட வெடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.
தேவி: மங்களநாயகி சுவாமி உமாமகேசுவரர்

திருப்புள்ளிருக்குவேளூர் பண்: திருத்தாண்டகம் நான்காம் திருமுறை

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
தேவி: தையல்நாயகி சுவாமி வைத்தியநாதர்

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) பண் : திருத்தாண்டகம் ஆறாம் திருமுறை

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 1
தேவி: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி சுவாமி: பிப்பிலிகேஸ்வரர், எறும்பீஸ்வரர், மதுவனேஸ்வரர், மாணிக்கநாதர்

திருச்செங்காட்டங்குடி பண் : திருத்தாண்டகம் ஆறாம்-திருமுறை

கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 4
தேவி: திருக்குழன்ன்டராது சுவாமி: கணபதீச்சுரர்

திருவாரூர் பண் : கெளசிகம் மூன்றாம்-திருமுறை

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.
தேவி: அல்லியங்கோதை சுவாமி: வன்மிகநாதர் வீதிவிடங்கன் (புற்றிடங்கொண்டநாதர்)

திருப்பயற்றூர் பண் : திருநேரிசை நான்காம்-திருமுறை

நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.
தேவி: காவியங்கண்ணி சுவாமி: பயற்றூர்நாதர்

திருநல்லம் பண் : திருக்குறுந்தொகை ஐந்தாம்-திருமுறை

அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
தேவி: சுவாமி:

திருக்கீழ்வேளூர்
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே
தேவி: வனமுலைநாயகி சுவாமி: அட்சயலிங்கமூர்த்தி கேடிலியப்பர்

திருமுதுகுன்றம் பண் : திருத்தாண்டகம் ஆறாம் திருமுறை

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 3
தேவி: பெரியநாயகி சுவாமி: பழமலைநாதர்

பாச்சிலாச்சிராமம் ஏழாம் திருமுறை
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 1

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார். 12

தேவி: பாலசுந்தரி சுவாமி: மாற்றறிவரதர்

திருவாசகம் எட்டாம்திருமுறை

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 62

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரியவாட் கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட் டேனே. 65

போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்
போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றிஎல் லாஉயிர்க் கும்ஈ றாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 70

திருக்கோவையார் 400
காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே.

திருவிசைப்பா திருச்சாட்டியகுடி பண்: பஞ்சமம் 9ஆம் திருமுறை
பெரியவா கருணை இளநிலா எறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால்
தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 1

சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே. 9
தேவி: வேதவநாயகி சுவாமி: இருக்வேதநாதர்

திருப்பல்லாண்டு கோயில் பண்: பஞ்சமம்
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்(கு)இவ் வண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10
தேவி: சிவகாமியம்மையார் சுவாமி: நடராசப்பெருமான்

திருமந்திரம் பத்தாம் திருமுறை
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே. 1046

தையல் நல்லாளை, தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பைய நின்று ஏத்திப் பணிமின், பணிந்தபின்
வெய்ய பவம் இனி மேவகி லாவே. 1103

பதினொன்றாம்-திருமுறை சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே. 1

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே. 70

பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம் திருநகரச் சிறப்பு
தண்ணளி வெண்குடை வேந்தன்
செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார்
வானவர் பூமழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண்எதிரே
அணி வீதிமழ விடைமேல்
விண்ணவர்கள் தொழ நின்றான்
வீதி விடங்கப் பெருமான். 45

சடை மருங்கில் இளம்பிறையும்
தனி விழிக்குந் திருநுதலும்
இட மருங்கில் உமையாளும்
எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும்
முன்கண்டு அரசன் போற்றிஇசைப்ப
விடை மருவும் பெருமானும்விறல்
வேந்தற்கு அருள் கொடுத்தான். 46

பொன்தயங்கு மதி லாரூர்ப்
பூங்கோயில் அமர்ந்த பிரான்
வென்றி மனு வேந்தனுக்கு
வீதியிலே அருள் கொடுத்து
சென்றருளும் பெரும் கருணைத்
திறம் கண்டுதன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை
ஏழ் உலகும் எடுத்தேத்தும். 49

திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவிலது எனினுங் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்றது அன்றே. 860

அன்னபூரணியம்மை திருவிருத்தம்
கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தனி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை
தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு
என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை
இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமபராம்பிகை பார்வதி
ஆதி எண்ணிலா நாம ரூப
அன்னையாய் காசி முதலாகிய தலத்து
விளையாடிடும் விசாலாக்ஷியாம்
அண்டகோடிகள் பணி அகண்ட பூரணி என்னும்
அன்னபூரணி அன்னையே

காமாட்சியம்மை திருவிருத்தம்
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பி னொலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் ;
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்,
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்,
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

வைத்தீசுவரன் கோயில் செல்வ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ~ குமர குருபர சுவாமிகள் அருளியது
தருமன்னு பொன்னுலகு மண்ணுலகும்
ஒக்கத் தலைத்தலை மயங்கத்தொகும்
சன்னிதி யடைந்தவர்கள் பையுணோய் முற்றும்
தவிர்ந்து அககிழ்ந்து தவிராக்
கருமன்னு மூழிப் பெரும்பிணியு மாற்றிடுதல்
கண்டனை யிருத்தியானின்
கயரோக முடன்முயற் கறையுந் துடைத்திடக்
கருதிடுதியேல் எம்பிரான்
திருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத்
திருச்சாந்து நிற்கவற்றாச்
சித்தாமிர் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந்
திவலையொன் றேயமையுமால்
அருவென்ன வுருவென்ன வன்றென்ன
நின்றவனொ டம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ யாடவாவே … 75

ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்பது
ஒருதெய்வ முண்டெனவெடுத்து
உரையா லுணர்த்துவதை ஒழியவெ எவர்
எவர்கட்கும் ஊன்கண் உளக்கண்ணதாம்
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்து
அவர்கள் வேண்டிய வரங்கொடுப்பான்
மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்
புவியில் வேறில்லை யென்றுணர்தியாற்
பொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப்
புத்தேள் பெரும்புவனமும்
பொன்னுலகு மண்ணுலகு மெவ்வுலகு
வேண்டினும் பொருளன் றிவற்குமற்ற
அழியாத வீடுந் தரக்கடவன் இவனுடன்
அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலீ யாடவாவே .. 76

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
அன்னைசொற் கொருசெவி யையர்சொற் கொருசெவி
அம்மான் றுதிக்கொருசெவி
யானைசொற் கொருசெவி வீரர்சொற் கொருசெவி
அயன்றுதிக் கொருசெவிவிணோர்
மன்னர்சொற் கொருசெவி வள்ளிசொற் கொருசெவி
வான்வனிதை சொற்கொருசெவி
மறைதுதிக் கொருசெவி யடியர்சொற் கொருசெவி
வல்லசுரர் சொற்கொருசெவி
பன்னிரண் டுங்கொடுத் தென்சொல்கே ளாமற்
பாராமுகம தாயிருந்தால்
பாவியேன் மெலிவுகுறை யெவர்செவியி லேற்றிப்
படுந்துயர் களைந்துகொள்வேன்

~ பழனி ஆண்டவர் துதி
கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்
ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேக வக்த்ரம்!
காத்யாயனீ ப்ரியஸுதம் கடிபத்தவாமம்
கௌபீன தண்ட தரதக்ஷிண ஹஸ்தமீடே!!

தெய்வமணி மாலை திருவருட்பிரகாச வள்ளலார்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

~ துர்க்கைச் சித்தர் சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் ~செந்திலாதிபன் திருப்பள்ளி எழுச்சி
வெற்றி வேற்கரமுடையாய் எமையுடையாய்
விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டு
சுற்றிய அடியேங்கள் தூய்மனத்துடனே
சொல்மகிழ்வுடன் நின்திருவடி தொழுவோம்
தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்
திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
எற்றுயர் சேவற் பதாகையையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 01

கீழ்திசை அருணணும் கிளரொளி வீச
கிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ
காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
கடிமா மலருடன் ஏந்திய கையார்
தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்
தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
ஏழிசை பரவும் நற்செந்திலம்பரனே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 02

வெண் சங்கமுழங்கின விசையொலி பேரி
விதவித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
பண்ணிசை வேதியர் வேதமுழங்கி
பனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்
எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 03

பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்
பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 04

பஞ்சபூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்
பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூரா
சதுர்மறை யூடுறை ஷண்முகநாதா
எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 05

செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
ஒப்பரும் இருடிகள் தம்மனையோடும்
உவமையில் ஜெபத்தொடு ஒன்றியே அமர்ந்தார்
செய்ப்பெறும் நீள்வயல் சூழ்திருச்செந்தூர்
சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 06

தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
செப்புகின்ற அமுதம் இனிதென உணரார்
மானமர் திருவடி படிமிசை உறவே
வந்தெமை ஆண்டிட இங்கெழுந்தருளும்
மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்
வேலனே சீலனே விஞ்சையர் கோனே
ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே 07

ஆதி நடுவும் அந்தம் ஆகியும் நின்றாய்
அரி அயன் அறியார் யாருனை அறிவார்
ஜோதி வடிவாம் இருதேவியும் நீயும்
தொல் புகழ் அடியார்க் கருள் செயும் பரனே
ஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி
உயர் திருசீரலைவாய் நகர் காட்டி
வேதியராவதும் காட்டி வந்தாண்டாய்
விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே 08

வானகத் தேவரும் வழிபடும் நின்னை
மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
மான இப்புவிதனில் வந்தமர் வாழ்வே
மன்னு செந்தூரா வழிவழியடியோம்
ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
ஞான அகத்தினில் நன்றொளிரானாய்
நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே 09

அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
ஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே
சிவகுமரா யாங்கள் உய்ந்திட நினைத்து
சீரலைவாய் உறைவாய் அயன் மாலா
புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
புண்ணியனே நின்கருணையும் நீயும்
தவமிலா சிறியெமை தடுத்தாள வல்லாய்
தயாபரனே பள்ளி எழுந்தருளாயே. 10

ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
நித்தங் கமழ் பன்னீராட்டி
நீல விழிக்கு மையுமிட்டு
நிமலி மகிழ்ந்து கலன் பூட்டி
நெற்றி அதனில் திலகமிட்டு
அத்தன் நினைப் பொற் தொட்டிலிலிட்டு
அப்பா அரசே எனத் துதித்து
அம்மை தாலாட்டிட
ஐயன் அதனைக் கண்டு முறுவல் செய்து
சித்த்த்து இனிக்கும் சிவபோகந் திகழ்
தேவாரப் பணும் திருவாசகமும் திருப்புகழும் செப்ப
சைவ வேளாளர் முத்தம் பெறவே
அருள் புரியும் முருகா முத்தம் தருகவே
மும்மலம் அகற்றும் ஆய்க்குடி வாழ் முருகா
முத்தம் தருகவே

திருப்புகழ் பழமுதிர்ச்சோலை
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.

நாலாயிர திவ்ய பிரபந்தம்
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.
தொண்டரடி பொடியாழ்வார் 873

நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்ப தோராசையினால்,
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றனனெம் பெருமான்!,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா!,
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.
திருமங்கையாழ்வார் 1035

வாடி வாடி இவ்வாணுதலே
ஆடி ஆடி அகம் கரைந்து,
இசை பாடி பாடி கண்ணீர் மல்கி,
எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடி இவ்வாள் நுதலே
திருவாய்மொழியும் திருமொழி இரண்டாம் பத்து

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
திருமங்கையாழ்வார் 956

அருமறை முதல்வனை ஆழிமாயனை
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
நாதனே நரசிங்கம்-அது ஆனாய்
உம்பர்_கோன் உலகு ஏழும் அளந்தாய்
ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே
காரணா கடலை கடைந்தானே
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே
ஏழையேன் இடரை களையாயே
பெரியாழ்வார் 441

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு
இறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது
சென்று இயங்கும் என்
துணை எந்தை தந்தை தம்மானைத்
திருவல்லிக் கேணி கண்டேனே.
திருமங்கையழ்வார் 1072

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே !
செந்தில் நகர் சேவகா என திருநீறு
அணிவார்க்கு மேவ வாராதே வினை

ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்

~ மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே

பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌளிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்
விருந்தே வருக மும்மதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைந்த பரமா ன்ந்தத்தின்
விளைவே வருக பழமறையின்
குருந்தே வருக அருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளம்
குடைவார் பிறவிப் பெரும் பிணிக்கோர்
மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலயத்துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
குமரகுருபர சுவாமிகள்

~ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ்
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே.
அழகிய சொக்கநாதப்பிள்ளை

திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்

திருநள்ளாறு திருத்தாண்டகம்
குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்
குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.

திருவெம்பாவை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 12

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 15

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 17

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுஉரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். 19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய். 20

திருப்பள்ளியெழுச்சி

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9

புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10

திருப்பாவை ஆண்டாள் அருளியது
பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாடல் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாடல் 7
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாடல் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாடல் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாடல் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 13
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பாடல் 15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாடல் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாடல் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடல் 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாடல் 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாடல் 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்